×

விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் அவலம் பார்க்கிங் இடமாக மாறிய நடைபாதைகள்

*வெயிலில் காத்திருக்கும் பயணிகள்

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

விழுப்புரம் : விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபாதைகள் பார்க்கிங் இடமாக மாறியுள்ளதால் நடக்க இடமின்றி பயணிகள் தவித்து வருகின்றனர்.விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பேருந்து வசதிகளை கொண்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பேருந்துநிலையங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதனிடையே தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்துசெல்கின்றனர். முகூர்த்தநாட்கள், பண்டிகை நாட்களில் வழக்கத்தைவிட பயணிகள்கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் பலஆண்டுகளாக புதியபேருந்துநிலையத்தில் ஆக்கிரமிப்பு பிரச்னை நீடித்து வருகிறது.

நடைபாதைகளை ஆக்கிரமித்து ஒருபுறம் கடைகளை வைத்துள்ளதால் பயணிகள் நடந்துசெல்வதற்கே வழியில்லை. பழக்கடைகள், ஸ்வீட், ஜூஸ்கடைகள் உள்ளிட்ட கடைகளை வைத்து பயணிகளுக்கு வழிவிடாமல் உள்ளனர். நகரபேருந்துகள் நிற்கும் பகுதியில் நடைபாதையையும் தாண்டி பேருந்துகள் வந்து நிற்கும் பகுதியிலும் இந்த ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, செஞ்சி மார்க்கத்தில் நடைபாதையில் இருசக்கரவாகனங்கள் அணிவகுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக, பயணிகள் நடந்து செல்ல வழியில்லாமல் கடும்வெயிலில் நடந்து சென்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, காவல்துறை பலமுறை நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்தமுறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றிடவும், கடைகளை அகற்றி பயணிகள் வெளியில் காத்திருப்பதை தவிர்த்து அவர்களுக்காக கட்டப்பட்ட நடைபாதை நிழற்குடையில் காத்திருக்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

வளவனூரிலும் இதே நிலை

விழுப்புரம் அடுத்துள்ள வளவனூர் பேரூராட்சி முக்கிய பகுதியாக உள்ளது. புதுச்சேரி சாலையில் உள்ள வளவனூர் பேருந்துநிறுத்தத்தில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட பலரும் இங்குளள் பயணிகள் நிழற்குடையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். பயணிகள் ஒதுங்குவதற்குகூட இடமில்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். இதனால் அரசு பல லட்சம் செலவு செய்து கட்டியும் பயணியர் நிழற்குடையானது இருசக்கரவாகனங்களின் நிழற்குடையாக காட்சியளிக்கிறது. காவல்துறையினர் இதற்கு உரிய நடடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் அவலம் பார்க்கிங் இடமாக மாறிய நடைபாதைகள் appeared first on Dinakaran.

Tags : Avalam ,Villupuram ,Chief Minister ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும்...